×

தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்? எஸ்பிஐக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்: திங்கள்கிழமைக்குள் பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் பத்திர வரிசை எண்களை வௌியிடாத பாரத ஸ்டேட் வங்கிக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் அரைகுறை தகவல்கள் தாக்கல் செய்தது பற்றி வரும் திங்கட்கிழமைக்குள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதற்கான சட்டம் கடந்த 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் பா.ஜ அதிக பலன் பெறுவதாக கூறி தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக தொடரப்பட்ட 4 பொதுநல மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில், “ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் பத்திரம் மூலம் திரட்டப்பட்ட நிதியை அதை அளித்தவர்களிடமே அரசியல் கட்சிகள் உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும். அந்த விவரங்களை மார்ச் 13ம் தேதிக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வௌியிட 4 மாதம் கூடுதல் அவகாசம் தரும்படி பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை விடுத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘‘தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகள் அனைத்தையும் மார்ச் 12ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதனை மார்ச் 15ம் தேதிக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தது.

நீண்ட இழுபறி மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் பாரத ஸ்டேட் வங்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடந்த திங்கட்கிழமை(11ம் தேதி) மாலை தாக்கல் செய்தது. பாரத ஸ்டேட் வங்கி கொடுத்த அனைத்து தரவுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் சிறு மாற்றங்களை கேட்டு தலைமை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்படி, ‘தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவகாரத்தில் முழு விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வழங்காமல் அரைகுறையாக கொடுத்துள்ளது. குறிப்பாக ரூபாய் நோட்டுகளில் இருப்பது போன்று தேர்தல் பத்திரங்களிலும் வரிசை எண்கள் இருக்கும். அதனை வைத்து தான் விவரங்களை சரி பார்க்க முடியும். ஆனால் பாரத ஸ்டேட் வங்கி அந்த எண்களை கொடுக்கவில்லை. எனவே முழு விவரங்களை வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சரமாரி கேள்வி எழுப்பினார். அதில்,‘‘பாரத ஸ்டேட் வங்கி ஏன் தேர்தல் பத்திர வரிசை எண்கள் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. அதை அவர்கள் கட்டாயம் வெளியிட வேண்டும். மேலும் தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள், அவர்களது பெயர் என்ன, தேதி, எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள் , எந்த அரசியல் கட்சி எந்த தேதியில் அந்த தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து பணமாக மாற்றினார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட நாங்கள் முன்னதாக உத்தரவு பிறப்பித்து இருந்தோம். ஆனால் மற்ற விவரங்களை வழங்கி விட்டு தேர்தல் பத்திர எண்களை மட்டும் வெளியிடாமல் அரைகுறை தரவுகளை கொடுத்தது ஏன்? எங்கள் தீர்ப்பில், தேர்தல் பத்திரங்களை வாங்குபவர், தொகை மற்றும் வாங்கிய தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். அவர்கள் பத்திர எண்களை வெளியிடவில்லை.

எஸ்பிஐ மூலம் அவை வெளியிடப்பட வேண்டும். இந்த விவகாரங்களில் தேர்தல் பத்திர எண்கள் உட்பட முழு தரவுகளையும் வெளியிட வேண்டும். அறைகுறையாக தரவுகள் தாக்கல் செய்யப்பட்டது குறித்து எஸ்பிஐ வங்கி திங்கட்கிழமைக்குள் விளக்கமாக பதில் அளிக்க வேண்டும்’ என தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர். மேலும் அடுத்த முறை இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போது எஸ்பிஐ தரப்பு வழக்கறிஞர் கட்டாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதேபோன்று இந்த விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தாக்கல் செய்த ஒரிஜினல் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் நகல் எடுத்துக்கொண்டு அதை மீண்டும் தேர்தல் ஆணையத்துக்கு திருப்பி வழங்கி விட வேண்டும் என உச்ச நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.

* தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும்.
* தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம்.
* அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம்.
* மோடி அரசு 2017ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. 2018 ஜனவரி 29 அன்று சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.
* தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.

The post தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்? எஸ்பிஐக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்: திங்கள்கிழமைக்குள் பதில் அளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,SBI ,New Delhi ,State Bank of India ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...